கொடியேற்றினார் விஜய்; கட்சி கொள்கைகள், பாடல் அறிமுகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது. பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், சற்று முன் கொடியேற்றி வைத்த விஜய், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலை வெளியிட்டார்.
தமிழன் கொடி பறக்குது
‘தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது’ எனத் தொடங்கும் கட்சியின் கொள்கை பாடலை விஜய் வெளியிட்டார்.
கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்தனர்.
அன்பு தம்பிக்கு வாழ்த்து
சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,”தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் துவங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய், தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
த.வெ.க., உறுதி மொழிகள்
* மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, மக்களுக்கு கடமை ஆற்றுவேன்.
* சாதி, மதம், பாலினம் என்ற வேற்றுமைகளைக் கடந்து, சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம் .
* அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் .
* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.