Saturday, July 19, 2025
இந்தியா

ரஷ்யாவுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் 40 விமானங்களை தகர்த்தது உக்ரைன்

மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022 பிப்ரவரியில் போர் தொடர்ந்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், நிபந்தனைகளுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.

பெரிய சேதம்

இதனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக, இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், உக்ரைன் நேற்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவுக்குள் புகுந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் விமானப் படைக்கு சொந்தமான 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் இருந்து, 4,300 கி.மீ., தொலைவில் உள்ள ரஷ்யாவின் இர்குட்ஸ் ஓப்லாஸ்டின் பேலயா விமானப் படை தளத்தின் மீது, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தின.

இதைத் தவிர, உக்ரைனில் இருந்து, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள ரஷ்யாவின் முர்மான்ஸ்க் ஓப்லாஸ்டின் ஓலன்யா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான, மிகவும் விலை உயர்ந்த போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது.

போர் நிறுத்தம்

ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க, ராணுவ அமைச்சர் ரஸ்தம் உமரோவை அனுப்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்தார்.

இதற்கு சில மணி நேரங்களில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *