Friday, July 18, 2025
உலகம்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்

உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால், மாஸ்கோ விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படை தளம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியது.

ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்த போர் துவங்கியதற்கு பிறகு, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியது.

தற்போது ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இரண்டு மணி நேரத்தில் உக்ரைனின் 76 ட்ரோன்களை சுட்டு அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான ரோசாவியாட்சியா பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது உக்ரைனுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *