தேனியில் ரூ.67.76 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம்: புதிதாக 13 ஆயிரம் இணைப்புகள் வழங்க முடிவு
தேனி: தேனி நகராட்சியில் ரூ.67.76 கோடியில் பாதாளசாக்கடை திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்துவதால் புதிதாக 13 ஆயிரம் இணைப்புகள் வழங்க முடிவு செய்து பணிகள் நடந்து வருகிறது.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வீடுகள் வணிக வளாகங்கள் என 26 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. மக்கள் தொகை 1.5 லட்சத்திற்கும் மேல் உள்ளது. மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இங்கு பத்து ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9500 கட்டடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பாதாள சாக்கடை கழிவுகள், சுப்பன்செட்டி தெருவில் உள்ள கழிவு நீர் உந்து நிலையத்தில் பம்பிங் செய்யப்படுகிறது.
இங்கிருந்து கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் ராஜாகுளத்தில் சேகரிக்கப்படுகிறது. தினமும் 8 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஒரு எம்.எல்.டி., என்பது 10 லட்சம் லிட்டராகும். இந்நிலையில் பாதாள சாக்கடை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகள், வணிக வளாகங்கள் சர்வே செய்யப்பட்டுள்ளது.
நகர்பகுதியில் ரூ.67.76 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தும் பணிகள் துவங்கி உள்ளது.
இதற்காக பல இடங்களில் ‘பம்பிங் ஸ்டேஷன்’ அமைக்க உள்ளோம். நகர்பகுதி, அல்லிநகரம், காந்திஜி நகர் உட்பட 13 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க ஆய்வு நடக்கிறது. புதிதாக 13,862 இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 16 எம்.எல்.டி., வரை சுத்திகரிப்பு செய்ய முடியும். என்பதால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிப்படை தன்மை வேண்டும்சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புதிய இணைப்புகள் வழங்கும் போது இணைப்பிற்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்கவும், ஆன்லைன் மூலம் புதிய இணைப்பிற்கான பணம் வசூலிக்க வேண்டும்.
இணைப்பு வழங்க வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்பந்ததாரர்கள் பேரம் பேசுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.