பஹவல்பூர் – சியால்கோட் வரை தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு செயல்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் நான்கு இடங்களிலும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐந்து இடங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதலில், ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா, ஹெஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்கள்:
மர்காஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர்: பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருக்கும் இப்பகுதி, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத குழுவின் தலைநகரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரின் குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தனர். கடந்த 2001ல் நடந்த பார்லி., தாக்குதல், 2019ல் நடந்த புல்வாமா தாக்குதல் போன்றவை இந்த அமைப்பினால் நடத்தப்பட்டது.
• மர்காஸ் தைபா, முரிட்கே : லாகூர் அருகில் இருக்கும் முரிட்கே, லஷ்கர் – -இ- – தொய்பா அமைப்பின் முகாமாகும். இந்த இடத்தில் பயங்கரவாத பயிற்சி கூடம், ஆயுதக் கூடம், ஆயுத போக்குவரத்து போன்றவை செயல்பட்டு வந்தன. கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கும், இந்த அமைப்புக்கும் சம்பந்தம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
• சர்ஜல், டெஹ்ரா காலன் : பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் இந்த இடம், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு முக்கிய ஏவுதளமாக செயல்பட்டு வந்தது. இந்த முகாம், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பிற்கு சொந்தமானது. நம் எல்லைக்குள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ஏவுவதற்கான முக்கிய தளமாக இப்பகுதி செயல்பட்டு வந்தது. சுகாதார மையம் என்ற போர்வையில் போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
• மெஹ்மூனா மோயா, சியால்கோட் : பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த முகாம், ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் பயிற்சி மையமாக செயல்பட்டு வந்தது. இந்த முகாமில் இருந்தும் ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைவதை பயங்கரவாதிகள் வழக்கமாக வைத்திருந்தனர்.
• மர்காஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா : எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 10 கி.மீ., தொலைவில் செயல்பட்டு வந்த இந்த முகாம், லஷ்கர் பயங்கரவாதிகளின் முக்கியமான பகுதியாகும். ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, ரியாசி மாவட்டங்களுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு இந்த முகாம் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது.
• மர்காஸ் அப்பாஸ், கோட்லி : பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த இப்பகுதியில் தற்கொலை படையினர், கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு இந்த முகாம்களில் பயிற்சி வழங்கப்பட்டது. லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரின் பயிற்சி தளமாக விளங்கியது-.
•மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி : ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் பயிற்சி தளமான இங்கு, பயங்கரவாத பயிற்சி மற்றும் ஆயுத குவிப்புக்கு பயன்பட்டு வந்தது.
•ஷவாய் நல்லா, முசாபராபாத் : லஷ்கர் – இ – தொய்பாவின் முக்கிய முகாம்களில் ஒன்றான இங்கு, பாகிஸ்தான் ராணுவம், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆகியவற்றின் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. இங்கு, ஒரே நேரத்தில் 250 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் வசதி இருந்தது.
•சையத்னா பிலால் மர்காஸ் : ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைய இந்த முகாமை பயன்படுத்தி வந்தனர். இங்கு, 50 முதல் 100 பயங்கரவாதிகள் நிரந்தரமாக வசித்து வந்தனர். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அங்குள்ள சிறப்பு படைகள் வாயிலாக பயங்கரவாதிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.