காங்., மாநிலத் தலைவர் தேனி வருகை புறக்கணிக்க நிர்வாகிகள் முடிவு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
தேனிக்கு ஆக., 2ல் வருகை தரும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சியை புறக்கணிப்பதென நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேனி மாவட்டத்திற்கு ஜூலை 24 ல் பங்கேற்க உள்ளதாக முன்பு தெரிவித்தனர். பின் மாவட்ட தலைமைக்கு மாநில தலைமை தகவல் அளிக்காமல் கட்சியின் இணைய உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்திக்கு ஆக., 2ல் விழாவில் பங்கேற்க உள்ளதாக மாநில தலைமை தகவல் அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் அல்லிநகரம் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சன்னாசி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆக., 2ல் மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்திற்கு மாவட்டத் தலைமைக்கு முறையான தகவல் வழங்காததால், காங்கிரஸ் நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் முருகேசன் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.