Saturday, July 26, 2025
மாவட்ட செய்திகள்

மருத்துவக்கல்லுாரியில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பெண் டாக்டரை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் டாக்டர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தை கண்டித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இந்திய மருத்துவக் கழக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் மூர்த்தி, முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் தியாகராஜன், அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ஜெய்கணேஷ், இந்திய மருத்துவ கழகம் கம்பம் பள்ளத்தாக்கு தேனி கிளை தலைவர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலையில் புற நோயாளிகள் பிரிவின் முன்புறமாக 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பயிற்சி டாக்டர்கள் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தின் கதவினை பூட்டி அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினர். பெண் டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

டாக்டர்கள் பணியை புறக்கணித்ததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர். மதியம் டாக்டர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, பதாதைகள் ஏந்தி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஊர்வலம் சென்றனர். போராட்ட ஏற்பாடுகளை அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் அறவாழி, டாக்டர்கள் சிவா ராஜேஷ் செய்தனர். போராட்டத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், இந்திய பல் மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய பொது மருத்துவ நிபுணர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கிளினிக்குகள், ஸ்கேன் சென்டர்கள் மூடல்

கம்பம்: கோல்கட்டா சம்பவத்தை கண்டித்து கம்பத்தில் 20 க்கும் மேற்பட்ட தனியார் கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.

கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசு மருத்துவமனைகளில் வழக்கம் போ வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டது. ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டது.

இதனால் கேரளாவில் இருந்து கம்பம் வந்தவர்கள் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஓய்வு இணை இயக்குநர் சையது சுல்தான் கூறுகையில்,

டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எங்களின் எதிர்ப்பை காட்ட கம்பத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் 24 மணி நேரத்திற்கு மூடியுள்ளோம்.

மத்திய, மாநில அரசுகள் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *