வெள்ளத்தில் மிதக்கும் ஏலச் செடிகள்
கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏலத்தோட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. பிஞ்சுகள், சரங்கள் உதிர்கிறது. இருந்த போதும் இப்போதைக்கு மழை நல்லது என்று ஏல விவசாயிகள் கூறியுள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வண்டன் மேடு, புளியன் மலை சாஸ்தா நடை , இஞ்சிப்பிடிப்பு, மாலி, புத்தடி, நெடுங்கண்டம், பாரத்தோடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏலத்தோட்டங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏலத்தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பல தோட்டங்களில் ஏலச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செடிகளில் இருந்து பிஞ்சுகள், பூக்கள், சரங்கள் உதிர்ந்து வருகிறது.
இது தொடர்பாக ஏலக்காய் தொழில் நுட்ப ஆலோசகர்கள் கூறுகையில், ஏலத்தோட்டங்களுக்கு தொடர்ந்து மிதமான மழை தேவை. கனமழை ஆபத்தாகும். எந்த ஆண்டும் டிசம்பர் மாதம் மழை கிடைத்தது இல்லை.
தற்போது டிசம்பரில் மழை கிடைத்துள்ளது. இது ஏலச் செடிகளுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த மழை தொடர்ந்தால் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். என்றனர்.
ஏல விவசாயிகள் கூறுகையில், தற்போது பெய்து வரும் மழையில் ஏலத்தோட்டங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இது பல தோட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குழித்தொழு, பாரகடவு உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் செடிகள் வெள்ள நீரில் மிதக்கிறது. இதனால் ஏலத்தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். நேற்றும் பரவலாக இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் ஏல விவசாயிகள் கவலையில் உள்ளனர்