சாலை மறியலில் ஈடுபட்ட 66 விவசாயிகள் கூடலூர் அருகே வழக்கு
கூடலூர், டிச. 9: கூடலூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர் 66 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக தளவாட பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் கேரள மாநிலம், வல்லக்கடவு வனத்துறை சோதனைச்சாவடியில், பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த வாகனங்கள் கடந்த 4 நாட்களாக சோதனைச்சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையறிந்த தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக விவசாய சங்கத்தினர் குமுளி – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பென்னிகுக் மணி மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இந்நிலையில், குமுளி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக, பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கத்தை சேர்ந்த 66 பேர் மீது குமுளி போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.