மஞ்சளாறு அணைகள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு : கன மழையால் அடுத்தடுத்து நிரம்பிய சோத்துப் பாறை,
பெரியகுளம்,: மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து சோத்துப்பாறை அணை நிரம்பியது. மஞ்சளாறு அணையும் நிரம்பியது. அணை பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை, அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரத்து உள்ளது. அணை உயரம் 126.28 அடி. அக். 17ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. டிச. 12ல் அணை நீர்மட்டம் 112.83, டிச. 13ல் 116.17 அடியாக இருந்தது.
கன மழையால் ஒரே நாளில் 10.11 அடியாக உயந்து நேற்று முன்தினம் டிச. 13, இரவு 11:00 மணிக்கு அணை நிரம்பி,மறுகால் பாய்ந்தது. அணையில் 100 மி.கன அடி நீர் உள்ளது. மழையளவு 33 மி.மீ., அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 665.99 கன அடி நீர் அப்படியே மறுகால் பாய்ந்து வராக நதியில் செல்கிறது. இதனால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு 2865 ஏக்கர் பாசன வசதி பெறும். வராகநதி கரையோரப்பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சளாறு அணை: தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. இதன் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படும். அக்.17ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
டிச.12ல் அணை நீர்மட்டம் 52.70 அடியாக இருந்தது. கனமழையால் நேற்று முன்தினம் டிச.13 இரவு 11:50 மணிக்கு அணை நீர்மட்டம் 2.30 அடியாக உயர்ந்து அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 672 கன அடி வரத்தும், 566 கன அடி மூன்று கண் மதகு வழியாக வெளியேறுகிறது. அணை நீரினால் தேனி, திண்டுக்கல் மாவட்டம் 5259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
கலெக்டர் ஆய்வு: மஞ்சளாறு அணை பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். சப்-கலெக்டர் ரஜத்பீடன், மாவட்ட ஊராட்சி முகமை இயக்குனர் அபிதா ஹனீப், தாசில்தார் மருதுபாண்டி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் உடனிருந்தனர்.