தேனி துப்புரவு ஆய்வாளர் வேகத் தடையில் டூவீலர் மோதி பலி
கம்பம் : கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை புதிதாக அமைத்த வேகத் தடையில் மோதி டூவிலரில் வந்த தேனி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலியானார்.
கூடலூர் எல். எப். ரோடு தெருவை சேர்ந்தவர் சுருளியப்பன் 56, இவர் தேனி நகராட்சி துப்புரவு ஆய்வாளராக பணியாற்றினார். நேற்று காலை 6:00 மணியளவில் டூவீலரில் கூடலூரில் இருந்து புறப்பட்டு கம்பம் பஸ்ஸ்டாண்ட் செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளி முன்பு நெடுஞ்சாலைத் துறை புதிதாக வேகத் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. இதை கவனிக்காமல் வேகத்தடையில் மோதி டூவீலரில் இருந்து சுருளியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.