ஊதியம் கிடைக்காமல் பரிதவிக்கும் வனத்துறை தற்காலிக ஊழியர்கள்
மூணாறு : பண்டிகை காலங்களில் ஊதியம் கிடைக்காமல் வனத்துறை தற்காலிக ஊழியர்கள் பரிதவிப்பது வழக்கமாகி விட்டது.
மூணாறு டி.எப்.ஓ., அலுவலகத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் காட்டு யானை தடுப்பு பிரிவினர் உள்பட பலர் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த செப்.15ல் ஓணம் கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு முன்பு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. அப்பிரச்னை வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கவனத்திற்கு சென்றதால், ஓணம் பண்டிகைக்கு முன்பு ஊதியம் நிலுவை தொகை வழங்கப்பட்டது.
அதன்பின் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் நெருங்குவதால் ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர். பண்டிகைக்கு முன்பாக ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.