நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் மானா வாரியிலும் பயன்-தண்ணீர் பற்றாக்குறையின்றி 2ம் போக சாகுபடி செய்ய நம்பிக்கை
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடி முடிந்து தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இச்சாகுபடிக்காக 17 வாய்க்கால்கள் மற்றும் கண்மாய்கள் உள்ளன.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சண்முகாநதி, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பின.
வைகை அணையிலும் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 127.40 அடியாக உள்ளது.
இது தவிர கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய், கம்பம், உத்தம்பாளையம், சீலையம்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களும் நிரம்பியுள்ளன.
இதனால் மாவட்டத்தில் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள 18ம் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கரில் இருபோக பாசன நிலங்கள் உள்ளன.
தொடர் மழையால் கண்மாய் நிரம்பியுள்ளதால் தற்போது துவங்கியுள்ள இரண்டாம் போக சாகுபடி தண்ணீர் பற்றாக்குறையின்றி செய்ய முடியும். அதே போல் முல்லைப்
பெரியாறு அணையில் 127 அடியை கடந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.
கண்மாய்களும் நிரம்பி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மழையை நம்பி சோளம், கம்பு, மக்காச்சோளம், மொச்சை, தட்டாம்பயிறு உள்ளிட்ட பயிர்கள்பயிரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழை கை கொடுத்ததால் மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.