அரசு பஸ்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ‘டிஜிட்டல் போர்டு’கள் பயணிகள் அவதி
தேனி: மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ‘டிஜிட்டல் போர்டு’களில் முன்பகுதியில் ஒரு ஊரின் பெயரும், பின்பகுதியில் வேறு ஊரின் பெயரும் இடம் பெறுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது.
அரசு சார்பில் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில் சில செயல்படாமல் உள்ளன. சில பஸ்களில் முன் பகுதியில் ஒரு மாவட்டத்திற்கு என்றும், பின் பகுதியில் வேறு மாவட்டத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளன. இதனால் புறப்படும் நேரத்தில் பஸ்சில் ஏறுபவர்கள், அல்லது ஊரின் பெயரை படித்து பஸ்சில் ஏறுபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது, பிரச்னையாகிறது.
நேற்று (பிப்.2ல்) காலை 11:00 மணி அளவில் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை ஆரப்பாளையத்திற்கு TN58 N 2254 என்ற அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சின் முன்பகுதியில் ஆரப்பாளையம் என்றும், பின்பகுதியில் ‘சிதம்பரம்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கண்ணாடியில் கோவை, ஒட்டன்சத்திரம், மதுரை, அருப்புக்கோட்டை என எழுதப்பட்டிருந்தது. மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இது போன்று இன்னும் சில பஸ்களில் டிஜிட்டல் போர்டுகளில் செல்லும் ஊர்களின் பெயர் மாற்றி குறிப்பிடப்படுவது தொடர்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தேனியில் இருந்து சிதம்பரத்திற்கு நேரடி பஸ் இயக்கப்படுவது இல்லை. பஸ்சில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ் புறப்படும் முன் இருபுறமும் உள்ள போர்டுகளில் செல்லுமிடத்தின் பெயர்கள் சரியாக உள்ளதை, உறுதி செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்’ என்றனர்.