ஒண்டிவீரன் நகர் கு டியிருப்போர் அவதி ரேஷன் கடை 2 கி.மீ., உள்ளதால் இலவ ச அரிசி பெற கூடுதல் செலவு
தேனி,; ரேஷன் கடையில் இலவசமாக அரிசி வாங்கினாலும் ஆட்டோவிற்கு ரூ.100 செலவு செய்து கொண்டு வரும் நிலை ஏற்படுகிறது. அதே போல் போதிய குடிநீர் வினியோகம் இல்லாததல் ஆழ்துளை நீரை குடம் ரூ. 2க்கும் வாங்குவதாக தேனி ஒண்டிவீரன் நகர் குடியிருப்போர் குமுறுகின்றனர்.தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் பொம்மையகவுண்டன்பட்டி அருகே ஒண்டி வீரன் நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வசிப்போர் 2,3,4,11,12 ஆகிய வார்டுகளில் இடம் பெற்றுள்ளனர். ஓண்டி வீரன் நகரில் 5 வார்டுகள் இணைந்து இருப்பதால் வார்டு கவுன்சிலர் யார் என்பதே தெரியாத நிலையில் பலர் உள்ளனர். குறைகள் நிவர்த்தி செய்ய யாரிடம் முறையிட்டாலும் தீர்வு ஏற்படாமல் திருப்பி அனுப்ப படுகின்றனர்.
குடியிருப்போர் குரல் பகுதிக்காக அப்பகுதியில் வசிக்கும் சுப்புலட்சுமி, பஞ்சவர்ணம், சுப்பம்மாள், சாந்தி, ராணி ஆகியோர் கூறியதாவது: இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பலர் வசிக்கின்றோம். குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சரிவர குடிநீர் வழங்குவதில்லை. ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் குறைந்தளவு நேரமான அரைமணிநேரம் வினியோகிப்பதால் குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது. அதே போல் பிற பயன்பாட்டிற்கான தண்ணீர் தொட்டிகளில் மோட்டார் பம்பு செட்டுகள் பழுதாகி பராமரிப்பின்றி உள்ளன. குடிநீர் இல்லாததால் ஆழ்துளை குழாய் உள்ள வீடுகளில் குடம் ரூ.2 என விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இப்பகுதியில் குப்பை வாங்க, கழிவு நீர் கால்வாய் துார்வார நகராட்சி பணியாளர்கள் வருவதில்லை.வீடுகளுக்கு அருகே சாக்கடைகளை நாங்களே துார்வாருகிறோம். அதையும் அள்ளி செல்வதில்லை.
இதனால் மீண்டும் சாக்கடையில் மண் சேர்ந்து கழிவு நீர் தேங்குகிறது. தேங்கும் நீர் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலர் நோய் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதியில் ரேஷன் கடை இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக 2 கி.மீ.,துாரத்தில் உள்ள அல்லிநகரம் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இலவச அரிசி வாங்க ஆட்டோவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து எடுத்து வரும் நிலை உள்ளது. இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். பெண்கள் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் கரட்டுப்பகுதி, திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு செல்லும் ரோட்டினை சீரமைத்து தர வேண்டும். நகராட்சி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சில அதிகாரிகள் வந்தாலும் பார்வையிட்டு செல்வதோடு சரி, பணிகள் நடைபெறுவதில்லை. இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.