‛உங்கள் சொந்த வீடு’ திட்டத்தில் விண்ணப்பித்த போலீசார் காத்திருப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் சார்பில், ‛உஙகள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 82 பேருக்கானநிலத்தை வருவாய்த்துறையிடம் இருந்து பெறாமல் திட்டம் முடங்கியுள்ளது. போலீஸ்காரர், ஏட்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் சதுரடியை குறைத்துள்ளதால் போலீசார் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக போலீசார், தீயணைப்புத்துறை, சிறைத்துறையினருக்கு ‛உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் 10 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் வீடு கட்டித்தரப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், அங்காடி வளாகம், போலீசாருக்கான சலுகை விலை விற்பனை நிலையம், போலீஸ் புறநோயாளிகள் மருத்துவமனை உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதில் போலீசார், தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் கண்காணிப்பாளர் நிலை அலுவலர்களுக்கு 2400 சதுர அடி உள்ள இடத்தில் 1111 சதுரடியில் ரூ.49.51 லட்சத்தில் வீடு கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணி நிலைகளில் உள்ள பயனாளிக்களுக்கு 1800 சதுரடி உள்ள இடத்தில் 850 சதுரடியில் ரூ.37.86 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதவிர காவலர்கள், தலைமை காவலர் பணி நிலை அலுவலர்களுக்க 1800 சதுரடியில் 655 சதுரடியில் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம் தேர்வு:
தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் கொடுவிலார்பட்டி அருகே ஒரு கரடு அருகில் 10 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அரசு உத்தரவிட்டது போல் அந்த இடத்தை வருவாய்த்துறையிடம் இருந்து பெற வில்லை. இந்த வீடுகளை பெற தேனி மாவட்டத்தில் 82 பேர் விண்ணப்பித்து வீடுகள் பெற காத்திருக்கின்றனர். இந்நிலையில் போலீஸ்காரர், தலைமை காவலர் பணி நிலை போலீசாருக்கு முதலில் 800 சதுர அடி என கூறினர். பின் 655 என குறைத்து கூறிவிட்டனர். இதனால் சிறிய இடமாகி விடுவதால் போலீசார் அதிருப்தியில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‛‛விண்ணப்பத்தை பெற்ற நிலையில் திட்டம் கிடப்பில் உள்ளது. பிற மாவட்டங்களில் பயனாளிகள் வீடுகட்டி குடியேறி விட்டனர். பயனாளிகளுக்கு இடம் தேர்வு செய்து வீடு கட்டி வழங்க விரைவில் மாவட்ட எஸ்.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’, என்றனர்.