கோல்கட்டா சம்பவத்திற்கு எதிர்ப்பு மகப்பேறு டாக்டர்கள் இன்று கறுப்பு உடை
கோல்கட்டா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேனி மாவட்ட மகப்பேறு டாக்டர்கள் இன்று கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இரு நாட்களுக்கு முன் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டினர். அன்று தனியார் கிளினிக்குகளை 24 மணி நேரம் மூடியும், அரசு மருத்துவமனைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் டாக்டர்கள் தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்.
இதற்கிடையே தேனி மாவட்ட மகப்பேறு மருத்துவர்கள் இன்று (ஆக. 21 ) கறுப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கறுப்பு உடை அணிந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.