எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு; இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ”எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 6வது நாளாக ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
காஷ்மீரின் நவ்ஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.