அதிகாரிகளுக்கு தமிழில் பயிற்சி: தலைமை தேர்தல் கமிஷன் திடீர் முடிவு
முதன் முறையாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தேர்தல் அலுவலர்களுக்கு தமிழிலேயே தலைமை தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்தது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் அலுவலர்கள், ஊழியர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் பயிற்சி அளிக்க துவங்கியுள்ளது.
பூத் அளவிலான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 264 பேர், ஓட்டுப்பதிவு அதிகாரிகள் 14 பேர், இரண்டு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு மட்ட தேர்தல் பணியாளர்கள் என 293 பேர், நேற்றைய பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.
டில்லியில் இரண்டு நாள் நடக்கும் இந்த பயிற்சியில், முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தமிழிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை துவக்கி வைத்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், ”வாக்காளர் பட்டியலை மிகச் சரியாக தயாரிக்கவும், அவ்வப்போது தவறின்றி புதுப்பிக்கவும் தேர்தல் கமிஷனின் முதலாவது முகமாக இருப்பவர்கள், பூத் அளவிலான அதிகாரிகள்,” என குறிப்பிட்டார்.
வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு படிவங்களை துல்லியமாக நிரப்புவது குறித்து, பூத் அளவிலான அதிகாரிகளுக்கு நாடகங்கள், கருத்தரங்கம் உள்ளிட்டவை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
டில்லியில் பயிற்சி பெற்றவர்கள், சட்டசபை தொகுதியின் முதன்மை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
அடுத்த சில அண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இதுபோன்ற பயிற்சி அளிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக 2,300 பேருக்கு தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்துள்ளது.