ஆப்பரேஷன் சிந்தூர் முடியவில்லை: இனி வாலாட்டினால் உடனே பதிலடி
எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதில் புதிய பாய்ச்சலை காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ‘பாகிஸ்தானின் அத்துமீறலுக்கான இந்தியாவின் பதிலடி முன்பை விட அதிவேகத்துடன் இருக்க வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதில் அளியுங்கள்’ என, முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பது, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது.
கடந்த 7ம் தேதி அதிகாலை துவங்கி நான்கு நாட்கள் நீடித்த இந்தியா – பாக்., போர், நேற்று முன்தினம் நிறுத்திக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு வந்தது.
முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார்.
அதை தொடர்ந்து, ‘இரு தரப்புக்கும் பொதுவான இடத்தில் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கை வெளிட்டார்.
ஆனால், இந்த முறை பேச்சு நடத்தும் விவகாரத்தில் மத்திய அரசு மிக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதாவது, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை.
அதே நேரம் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு என்பது, பாக்., ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை நம்மிடம் திருப்பி ஒப்படைப்பது குறித்து மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அந்த முடிவு.
மேலும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏவிவிடும் பாக்., அரசின் செயல் தொடரும் வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்பதையும் அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
போர் நிறுத்தம் என்று அறிவித்தும் கூட, பாக்., வாலாட்டுவதை நிறுத்தவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது தாக்குதல்களை தொடர்கிறது.
‘அதற்கான பதிலடி இந்த முறை மிகத் தீவிரமாக இருக்க வேண்டும்’ என, முப்படைகளுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
‘ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை. பாக்., படைகள் வாலாட்டினால் அதற்கான பதிலடி முன்பை விட அதிவேகத்துடன் இருக்க வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதில் அளியுங்கள்’ என, பிரதமர் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.
மேற்கு எல்லையில் கடந்த, 10 – 11 நள்ளிரவில் பாக்., படைகள் நடத்திய தாக்குதல்களை, ராணுவ
தலைமை தளபதி உபேந்திர திவேதி ஆய்வு செய்தார்.
அதன் பின், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மேற்கு எல்லையில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், உத்தரவுகளுக்காக காத்திருக்காமல் உடனடியாக பதிலடி தரும் முடிவை எடுக்க ராணுவ தளபதிகளுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இந்தியா – பாக்., ராணுவ அதிகாரிகளிடையே இன்று பகல் 12:00 மணிக்கு அடுத்த கட்ட பேச்சு நடக்கவுள்ளது.
இதற்கிடையே, இந்தியா விமானப் படை வெளியிட்ட அறிக்கை:
ஆப்பரேஷன் சிந்துாரில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். தேசிய நோக்கங்களுக்காக திட்டமிட்டு, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்பரேஷன் சிந்துார் தொடர்கிறது. உறுதியில்லாத தகவல்களை பரப்புவதை தவிருங்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.