குண்டளை அணையில் சுற்றுலா படகு சேவை துவங்கியது
மூணாறு அருகே குண்டளை அணையில் இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு சுற்றுலா படகு சேவை துவங்கியது.
மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ. தொலைவில் குண்டளை அணை உள்ளது. கேரள மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர். மின்வாரியத்தின் ஹைடல் சுற்றுலா சார்பில் அணையில் பெடல், துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதியினருக்கு என காஷ்மீர் சிக்காரியா படகு, கயாக்கிங், பரிசல் ஆகியவை இயக்கப்படுகின்றன.
திறப்பு:குண்டளை அணை நிரம்பியதால் மே 4ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மாட்டு பட்டி அணையில் நிரம்பும். மாட்டுபட்டி அணையில் 2 மெகாவாட் மின் உற்பத்தி நடப்பதால் குண்டளை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருவதால் குண்டளை அணையில் ஷட்டர்கள் ஜூலை ஒன்றில் அடைக்கப்பட்டன. அணையில் தண்ணீர் தேங்க துவங்கியதால், தற்போது இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பெடல் படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. அணையின் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவில் உயர்ந்த பிறகு அனைத்து வகை படகுகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெடல் படகில் 30 நிமிடத்திற்கு இருவர் பயணிக்க ரூ.400, நான்கு பேர் பயணிக்க ரூ.600 கட்டணம் வசூலிக்கின்றனர்.