Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

மதுபாரை மூடுங்கள்; பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகே செயல்படும் தனியார் மதுபாரை மூட நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை தாமதாமாகிறது. எனவே,பொதுமக்கள் நலன் கருதி அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்.

பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜலட்சுமி, பொறியாளர் ராஜேஷ், மேலாளர் கோவிந்தராஜ், முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

வெங்கடேசன் (அ.ம.மு.க.,): புதிய குடிநீர் இணைப்புகளுக்கான ரோடு பராமரிப்பு கட்டணம் ஆண்டுக்கு 5 சதவீதம் கட்டணம் உயர்வு செய்யாமல் தற்போது ஒரேநேரத்தில் 30 சதவீதம் உயர்த்தியுள்ளது மக்களுக்கு சுமையை அதிகரிக்கும். இந்த தீர்மானத்தை ரத்து செய்யுங்கள். பெரியகுளம் நகராட்சி இணையதளத்தில் ஒப்பந்ததாரர் எடுத்த பணி விபரங்கள், ரூபாய் விபரம், வளர்ச்சி பணிகள், நகராட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட விபரங்கள் ஏதும் இல்லை. 2019- -2020 ஆண்டோடு நின்றுள்ளது. முடங்கிய இணையதளத்தை ‘அப்டேட்’ செய்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்.

தலைவர்: பரிசீலனை செய்யப்படும்.

மதன்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ.,) : மாதம் தோறும் கூட்டம் நடத்தாமல் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்துகிறீர்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து அடுத்த கூட்டத்தில் எழுத்து வடிவில் தெரிவியுங்கள்.

முகமது அலி (தி.மு.க.,): 7 வது வார்டில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார ஆய்வாளர் அசன்முகமதுவிடம் கேட்டால், பதிலளிக்க மறுக்கிறார். இதனால் மன உளைச்சலில் அவதிப்படுகிறேன்.

குமரன் (பா.ம.க.,):தென்கரை மூன்றாந்தல் காந்தி சிலை அருகே மனமகிழ் என்ற பெயரில் தனியார் மதுபாரினால் போக்குவரத்து, பெண்கள் கடந்து செல்வதில் சிரமம் உட்பட பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்னைகள் தினமும் நடக்கிறது. முந்தைய கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் ஒருமித்த கருத்தாக நகராட்சி பகுதியில் மதுபாரை அகற்ற வேண்டும் என சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். நடவடிக்கை இல்லை. தற்போதும் அந்த பார் நடந்து வருகிறது. பொதுமக்கள் சங்கடத்தில் உள்ளனர்.

தலைவர்: சிறப்பு தீர்மானத்தை கலெக்டர், டாஸ்மாக் மேலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குமரன்: நடவடிக்கை எடுக்க தாமதம் என்றால் நடவடிக்கை எடுக்கும் வரை அந்த மதுபாரினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர்.

தலைவர்: பரிசீலனை செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *