மூணாறு கூட்டுறவு வங்கியில் முறைகேடு குற்றச்சாட்டுகளால் சி.பி.எம்., கட்சிக்கு சிக்கல்
மூணாறில் மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையில் செயல்படும் கூட்டுறவு வங்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மூணாறில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையில் மூணாறு சர்வீஸ் கூட்டுறவு வங்கி பல ஆண்டுகளாக செயல்படுகிறது. அந்த வங்கி மூலம் மார்க்சிஸ்ட் கம்யூ., மூணாறு பகுதி செயலாளருக்கு விதிமுறைகள் மீறி ரூ. ஒரு கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் திரும்ப செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனை சமாளித்த நிலையில் வங்கி நிதியை தவறாக பயன்படுத்தி நட்சத்திர ஓட்டல் வாங்கியதாகவும், ஹைடல் பூங்காவில் பல்வேறு சுற்றுலா பொழுது போக்கு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் மாநில தணிக்கை பிரிவு கூட்டுறவு வங்கியில் 2022—2023 நிதியாண்டின் கணக்குகளை தணிக்கை செய்தபோது பல்வேறு முறைகேடுகள் தெரியவந்தது. வங்கி தலைவர், ஆட்சி குழு உறுப்பினர், முன்னாள் செயலர் ஆகியோர் பெயரில் உருவாக்கப்பட்ட கம்பெனி நட்சத்திர ஓட்டல் வாங்குவதற்கு விதிமுறைகள் மீறி ரூ. பல கோடி நிதி வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
ஆனால் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என வங்கி தலைவர் கூறி வரும் நிலையில் மாநில தணிக்கை பிரிவு கண்டறிந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் கோவிந்தனிடம் புகார் அளித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன் கடந்த சட்ட சபை தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து கட்சி மேலிடம் நீக்கியது.அவர் மாநில செயலாளரிடம் அளித்த புகாரில் கூறியதாவது, மாநில தணிக்கை பிரிவு மூணாறு சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் கண்டு பிடித்த முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பணம் மூலம் வளர்ந்த வங்கியில் தனியார் கம்பெனி அமைத்து மாற்று வழியில் ரூ.பல கோடி செலவிடப்பட்டதாக தணிக்கை பிரிவு கண்டறிந்தது. வங்கியில் ரூ. பல கோடி மாற்று வழியில் செலவிடப்பட்டது தொடர்பாக 2020 அன்றைய மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தேன். முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளேன், என புகாரில் குறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் முன் வைக்கப்பட்டதால் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.