சூறாவளியால் போடிமெட்டு மலைப்பாதையில் பயணிகள் சிரமம்
தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில் வீசி வரும் சூறாவளி காற்றால் டூவீலர், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் எதிர்நோக்கி செல்ல முடியாமல் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு செல்லும் வழித்தடமான போடி முந்தல் ரோட்டில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடிமெட்டு மலைப்பகுதி அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் வருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 18 அடி ரோடாக இருந்ததை 24 அடியாக அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்தும். வோக்வோம் டிரில்லர் மெஷின் மூலம் பாறைகள் அகற்ற பட்டதால் மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
போடிமெட்டு மலைப் பாதையில் ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த காற்று வீசி வருவது வழக்கம். டூவீலர், ஜீப், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் எதிர்நோக்கி செல்ல சிரமம் ஏற்படும். இந்நிலையில் நேற்று திடீரென வீசிய சூறாவளி காற்றால் போடிமெட்டு மலைப் பாதையில் ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் எதிர் நோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பலத்த காற்று வீசி வருவதையொட்டி போடிமெட்டு மலைப் பாதையில் வாகனங்களில் பயணிக்க பயணிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.