கம்பம் பள்ளத்தாக்கில் குத்து மொச்சை சாகுபடி அமோகம்
கம்பம் பள்ளத்தாக்கு மலையடிவாரங்களில் குத்து மொச்சை சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாரல் மழை பெய்வதால் மகசூல் அமோகமாக கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள மானாவாரி நிலங்களில் பயறு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடலூர், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மானாவாரி நிலங்களில் குத்து மொச்சையை விதைத்தனர். குத்துமொச்சை 90 நாட்களில் அறுவடை செய்யலாம். பெரும்பாலான விவசாயிகள் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கடந்த மாதம் முதல் சாரல் மழை பெய்தது தற்போது தொடர்ந்து மழை கிடைத்து வருகிறது. தற்போது மழை கிடைக்க வேண்டிய நேரம் என்பதால், பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், குத்து மொச்சை, எள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். மழை தொடர்ந்து கிடைப்பதால் பயிர்கள் வளர்ச்சி நன்றாக உள்ளது. மகசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றனர்.