நவீன விசைத்தறிகள் உற்பத்தியால் கைத்தறி ஜவுளிகள் தாக்குப் பிடிக்க முடியல
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீட்டில் சொந்தமாக கைத்தறிகள் அமைத்து சேலைகள், வேட்டிகள், துண்டுகள், கைலிகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தனர்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பல கோடி ரூபாய் நெசவாளர் சங்கங்களுக்கு கடன் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களின் விற்பனையில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடி மானியமும் வழங்கியது. ரக ஒதுக்கீடு சட்டமும் கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. 1980 முதல் 25 ஆண்டுக்கும் மேலாக ஆண்டிபட்டி பகுதியில் கைத்தறித் தொழில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தது.
மானியம் நிறுத்தம்
ஜவுளி தொழிலில் தாராளமயமாக்கல் கொள்கையால் கைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகளுக்கு போட்டியாக நவீன விசைத்தறிகளில் உற்பத்தி துவங்கியது. கூடுதலான உற்பத்தி, குறைவான அடக்க விலையால் கைத்தறியில் உற்பத்தி செய்த ஜவுளிகள் மார்க்கெட்டில் போட்டியை தாக்கு பிடிக்க முடியவில்லை.
இதனால் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்தது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்த ஜவுளிகளுக்கான தள்ளுபடி மானியத்தை அரசு நிறுத்தியது. இதனால் நெசவாளர் சங்கங்கள் நஷ்டத்தில் மூழ்கியது. தொடர்ந்து தொழில் கொடுக்க முடியாததால் நெசவாளர்கள் பலரும் மாற்று தொழிலுக்கு சென்றனர். எஞ்சிய கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் இலவச சேலை உற்பத்தி திட்டம் மூலம் தொழில் கிடைத்து வந்தது. இந்நிலையில் கைத்தறிக்கு மாற்றாக பெடல் தறிகள் அறிமுகமானது.
கைத்தறி நெசவு மட்டுமே தெரிந்த குறிப்பிட்ட வயதினர் சிலர் மட்டுமே தற்போது இத்தொழிலை தொடர்கின்றனர். இவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல், பாதுகாப்பு இல்லாததால் தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கைவிட்டு செல்லும் தொழில்
கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: 50 முதல் 60 வயதை கடந்த சிலர் மட்டும் வேறு வழி இன்றி இத்தொழில் செய்யும் நிலையில் உள்ளனர். சக்கம்பட்டியில் கைத்தறிகள் அகற்றப்பட்டு பெடல் தறிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. நுட்பமான வேலை, குறைவான கூலியால் கொப்பையும்பட்டியில் நெசவாளர்கள் பலரும் தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். வெளியூரிலிருந்து பாவு கொண்டு வந்து சேலை உற்பத்தி செய்தால் கூடுதல் செலவாகிறது. இதனால் இத்தொழிலை பலரும் கை விட்டுள்ளனர். கைத்தறி அமைத்தல், மறுசீரமைப்பு போன்ற தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும் நெசவாளர்கள் இல்லை. இதனால் மாவட்டத்தில் அழியும் தொழில்களில் கைத்தறி நெசவுத் தொழில் முக்கிய இடத்தில் உள்ளது என்றனர்.