சீட்டு நடத்தி ரூ.11.56 கோடி மோசடி
சீட்டு நடத்தி ரூ.11.56 கோடி மோசடி: 4 பெண்கள் வீடுகளில் சோதனை சொத்து ஆவணங்கள், புரோ நோட்டுகளை கைப்பற்றியது போலீஸ்
தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் பதிவு செய்யாத சீட்டு நடத்தி ரூ.11.56 கோடி மோசடி செய்த நான்கு பெண்களின் வீடுகளில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து சொத்து ஆவணங்கள், புரோ நோட்டுக்களை கைப்பற்றினர்.
வாழையாத்துப்பட்டி சரண்யா 36,விடம் 2000ல் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமணி, மலர்விழி பழகி, தாங்கள் சிறு சேமிப்பு சீட்டு நடத்தி வருவதாகவும், மாதந்தோறும் ரூ.200 செலுத்தினால் 36 மாதங்களில் ரூ.7200ம் பின், 37 வது மாதத்தில் இரட்டிப்புத் தொகை வழங்குவதாக தெரிவித்தனர். இதுபோல் பொம்மையக்கவுண்டன்பட்டி, பூதிப்புரத்தை சேர்ந்த 561 பேரை ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் பதிவு செய்யாத 4 சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்த்து ரூ.5.71 கோடி வசூலித்தனர். ஆனால் கூறியபடி பணத்தை இரட்டிப்பாக வழங்க வில்லை. அதன் மதிப்பு ரூ.11.56 கோடி ஆகும்.
பாதிக்கப்பட்டோர் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவில் 2024 பிப்., 1ல் ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
பின் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி., உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தேனி பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணிமாறன், இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3 மணி நேரம் வீடுகளில் ரெய்டு
இந்நிலையில் சீட்டு நடத்திய அல்லிநகரம் பள்ளி ஓடைத் தெரு மலர்விழி வீட்டில் டி.எஸ்.பி., மணிமாறன், பொம்மையக்கவுண்டன்பட்டி பெருமாள் தெரு ராஜாமணி வீட்டில் தேனி இன்ஸ்பெக்டர் மலர்விழி, பாரதியார் தெருவில் உள்ள ஜெயப்பிரியா வீட்டில் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் விமலா, அதேப்பகுதி தமிழரசி வீட்டில் சிவகங்கை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ., நேற்று காலை மூன்று மணி நேரம் ஆய்வு செய்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட புரோ நோட்டுகள், சீட்டு நடத்தியதற்கான பதிவு ஆவணங்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.