தி.மு.க., ஆர்ப்பாட்டத்தால் தேனியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் நகரில் முக்கிய ரோடுகளில் வாகனங்கள் செல்ல இயலாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.
தேனி காமராஜர் பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியினர் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. கம்பம் ரோட்டில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் ரோட்டை மறித்து நின்றனர்.
இதனால் கம்பம் ரோட்டில் வாகனங்கள் செல்லாமல் நேருசிலை சிக்னல் முதல் பெரியகுளம் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும், மதுரை ரோட்டில் பங்களாமேடு வரையிலும், கம்பம் ரோட்டில் பூதிப்புரம்பிரிவு வரையிலும் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முயற்சித்தாலும், ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் கார்கள், டூவீலர்கள் நிறுத்தியதால் போலீசார் முயற்சிகள் பலனின்றி போனது. ஆர்ப்பாட்டம் முடிந்து 30 நிமிடங்களுக்கு பின் போக்குவரத்து சீரானது.