கம்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ரோடு கூடலுார் நகராட்சிக்கு ஒப்படைக்க தீர்மானம்
கூடலுார்: கம்பம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகள், ரோடு ஆகியவற்றை கூடலுார் நகராட்சிக்கு ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. நகராட்சி எல்லைக்குள் கம்பம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பளியன்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய பூங்கா நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும், கூடலுாரில் இருந்து தாமரைக்குளம் செல்லும் ரோடு, கழுதை மேடு, பளியன்குடி, கன்னிமார் ஊத்து, கல்லுடைச்சான்பாறை, மந்தை வாய்க்கால், பெருமாள் கோயில், ஏகலுாத்து செல்லும் ரோடுகள் கூடலுார் நகராட்சிக்கு ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அங்கன்வாடி மைய கட்டடங்கள், சமுதாய மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்புச் சுவர் கட்டுவது, தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் அமைப்பது, சிறு பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் துவங்குவதற்கு முன்பு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.