தன்னிச்சையாக மூடிய ரயில்வே கேட்
தேனி பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் நேற்று தன்னிச்சையாக மூடியதால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தேனி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது. தற்போது மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடந்து வருவதால், பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து திருப்பிட விடப்பட்டதால் அதிக போக்குவரத்து உள்ளது. மதுரை- போடி தினசரி ரயில் இரு மார்க்கத்திலும், போடி-சென்னை ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது.
நேற்று பெரியகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மதியம் 2:00 மணிக்கு மேல் தன்னிச்சையாக மூடியது. ரயில்வே ஊழியர்கள் கேட்டில் இல்லை. ஆனால் ரயில்வே கேட்டிற்கு வெளியே மஞ்சள் சிக்னல் காணப்பட்டது. இதனால் இரு புறமும் வாகனங்கள் சுமார் 25 நிமிடங்களுக்கு மேல் அணிவகுத்து நின்றன. பின்னர் தேனி ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கேட் திறக்கப்பட்டது.
இது பற்றி ரயில்வே ஸ்டேஷன் அலுவலர்கள் கூறுகையில், ‘பெரியகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டிற்கும் , ரயில்வே ஸ்டேனிலும் ஒரே ஊழியர் பணியில் இருந்துள்ளார்.
ரயில் வரும்போது மட்டும் கேட்டில் பணிபுரிந்து பின் ஸ்டேஷன் சென்று விடுவார். நேற்று வடமாநில ஊழியர் பணியில் இருந்துள்ளார். அதே நேரம் ரயில்வே கேட் மூட பயன்படும் இயந்திரத்தை யாரேனும் இயக்க முயற்சித்தனரா என ரயில்வே போலீசில் புகார் செய்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர் என்றனர்.