கல்வி சாலைகளில் புரளும் கஞ்சா…. யார் தேனியின் ரோலக்ஸ்….
கல்வி சாலைகளில் புரளும் கஞ்சா….
யார் தேனியின் ரோலக்ஸ்….
தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. அதை உறுதிபடுத்தும் நிகழ்வாக பல சம்பவங்கள் நடந்துவருகிறது.
அதே போல தேனியில் கஞ்சா பயன்பாடு கொடி கட்டி பறக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு அரசு நல்ல சமுதாயத்தை உருவாக்க முதலில் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் கல்வி. கல்விதான் ஒரு மாணவனை மிகச்சிறந்த மனிதராக மாற்றும். அந்த மனிதர் மிகச்சிறந்த சமூகத்தை மாற்றுவார். அந்த சமூகம் மிகச்சிறந்த தேசத்தை உருவாக்கும். ஒரு தேசத்தின் அடித்தளமே கல்விதான். அப்படிப்பட்ட கல்விச்சாலைகளில் பயிலும் மாணவர்களின் கைகளில் தொடர்ந்து கஞ்சா தேனியில் கிடைப்பது வருத்தப்பட வேண்டிய செய்தியாக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் தொடர்ந்து தினசரி செய்திகள் படிக்கும் நபர் சாதரணமாக பார்த்தால் புரியும் ஒரு நாள் விட்டு ஒருநாள் கஞ்சா வழக்குகள் பதிவாகிறது . அதில் வயதான பெண்மணியை விக்க விடுவதும் , கஞ்சாவுடன் அவர்கள் பிடிப்படுவதும் , அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், மீண்டும் அவர்கள் விற்பதும் தொடர்கதையாகவே உள்ளது. காவல் துறை தொடர் நடவடிக்கை எடுக்கிறது என்று ஆறுதல் அடைவதா அல்லது மாணவர்களிடம் தொடர்ந்து கஞ்சா விற்கிறார்கள் என்று வருத்தபடுவதா என்று தெரியவில்லை.
செய்தி 1
கடந்த ஜூன் 29 தேதியில் 22 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கடமலைகுண்டு அருகே கைது ..செய்தி..
தேனி குமணன் தொழுவை சேர்ந்த சத்யராஜ், மாயன், வனராஜ் ஆகியோர் மூவர் தேனி வருசனாடு அரசு பேருந்தில் 22 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ளதாக தகவல் உள்ளது.
செய்தி 2
ஜூலை 12 தேதியில் ஆந்திராவில் இருந்து கம்பத்திற்கு 10 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது… செய்தி…
கம்பம் அருகே வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் ரோந்து சென்றனர். அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த கம்பம் சிவராஜா, ஜங்கால்பட்டி அபினேஷ், உசிலம்பட்டி குணசேகர், ராஜபாளையம் ராம்குமார் ஆகியோர் 10 கிலோ கஞ்சா கடத்தி விற்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி 3
ஜூலை 13 தேதியில் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்த இரண்டு மர்ம இளைஞர்கள் தட்டி கேட்ட முதியவரை கஞ்சா போதையில் மண்டையை உடைத்தனர். அவர்களின் கைகளில் 100 கிராம் கஞ்சாவுடன் பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள கமயகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் நவின் ஆவார். இவர்களின் வயது 22 தான் ஆகிறது.
செய்தி 4
ஜூலை 15 தேதியில் போடியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் ராணி கைது …
போடியில் கீழசொக்கனாதபுரம் நேருஜி தெருவை சேர்ந்த ராணி (52) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்று வந்துள்ளார். அவரை போடி போலீஸார் 150 கிராம் கஞ்சாவுடன் பிடித்து உள்ளனர்.
செய்தி 5
ஜூலை 15 ல் தேனியில் கஞ்சா விற்ற வயதான பெண்மணி கைது…செய்தி…
தேனி பூமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த
செல்லத்துரை மனைவி பொன்னுத்தாய் 71 வயது மூதாட்டியை மது விலக்கு போலீஸார் 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர். அவருக்கு கம்பம் பகுதியை சேர்ந்த பொண்ணாங்கன் மனைவி செல்வராணி(61) விற்றதாகவும் அவரை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
செய்தி 6
ஜூலை 21 தேதியில் ஆண்டிபட்டியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்கள் கைது…செய்தி…
ஆண்டிபட்டி அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று இருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்றதும் அவர்களிடம் இருந்து 60 கிராம் கஞ்சா போலீசாரால் கை பற்றபட்டுள்ளனர். பின் விசாரணையில் அவர்கள் மரவபட்டியை சேர்ந்த அன்னகொடி (21), ஜக்கம்மாள்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி (22). அவர்களை கைது செய்ததுடன் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ராஜதனியைச் சேர்ந்த கௌதம், கைலாசப்பட்டி தேவா இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தி 7
ஜூலை 19 ல் குமுளி சோதனைச் சாவடியில் 850 கிராம் கஞ்சா ஆயில் வைத்திருந்த மூவர் கைது.
குறி வைக்கப்படும் மாணவர்கள்….
தேனி மாவட்டத்தில் தேனி , ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், கடமலை என அனைத்து பகுதியில் கஞ்சா சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது என்பது இந்த செய்திகளை உற்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் இந்த கஞ்சா வழக்குகளில் கிலோ கணக்கில் பிடிபடுபவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இருந்தும் அவர்கள் தொடர்ந்து கஞ்சா கடத்துகிறார்கள். மற்றொரு தகவல் பள்ளி மாணவர்களுக்கு விற்கும் வயதான பெண்மணிகள் தொடர்ந்து கஞ்சா விற்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் இலக்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பது தான் என்றும். அவர்கள் வழக்கு பற்றி பயந்தது போல் தெரியவில்லை என்று நமக்கு தெரிகிறது. ஆண்டிபட்டியில் விற்றவர்கள் 22 வயது கொண்ட இளைஞர்கள்…
பெரும்பாலும் கஞ்சா விற்பதில் இளைஞர்கள் மற்றும் வயதான பெண்மணிகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள் பெரும்பாலும் கஞ்சா விற்பனையில் பிடிபட்டாலும் அவர்கள் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்க வில்லை என்று தெரிகிறது. இவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய Rolex இருக்கத்தான் செய்கிறான் … அவன் யார் அடுத்த அடுத்த இதழில் பார்ப்போம்.