அரசை விமர்சித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ., மீண்டும் சர்ச்சை பேச்சு
கடவுள் முதல்வரானாலும் இடுக்கியில் இருந்து மக்களை வெளியேற்ற முடியாது என ஆளும் கட்சி எம்.எல்.ஏ., எம்.எம். மணி தெரிவித்தார்.
கேரள முன்னாள் மின்துறை அமைச்சரும், உடும்பன்சோலை தொகுதி எம்.எல்.ஏ.யுமான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த எம்.எம். மணி தனது சர்ச்சை பேச்சால் மிகவும் பிரபலமானவர்.
போராட்டம்: மத்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். வனவிலங்கு தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மற்றும் அதனை சார்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் சாந்தாம்பாறை வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டமும், ஊர்வலமும் நடந்தது.
அவற்றை எம்.எம். மணி துவக்கி வைத்து பேசியதாவது: கடவுள் முதல்வரானாலும் இடுக்கியில் இருந்து மக்களை வெளியேற்ற முடியாது. மாவட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்காமல் தந்திரமாக காரியங்களை நடத்தி விடலாம் என எந்த அரசும் கருத வேண்டாம்.
தற்போதுள்ள வனங்களை வனத்துறை பாதுகாத்தால் போதும். புதிதாக வனங்களை உருவாக்க நினைக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் வனத்துறை மட்டும் அல்ல, வருவாய் துறையினரையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மாவட்டத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகை செய்ய வேண்டும்.
அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டிய நேரமிது. அரசு நம்முடையது என பார்க்க வேண்டியதில்லை. கலெக்டர் அலுவலகம் மட்டும் இன்றி தேவைப்பட்டால் சட்டசபை முன்பும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.
அரசை விமர்சிக்கும் வகையிலான எம்.எம்.மணி பேச்சு ஆளும் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.