Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அரசு -போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு; பைபாசில் பஸ்கள் செல்வதால் பயணிகள்- பாதிப்பு

மாவட்டத்தில் நகர்ப்பகுதிக்குள் பெரும்பாலன பஸ்கள் வராமல் பைபாஸ் வழியாக சென்று விடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினமும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.280 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைத்து 2022-ல் பயன்பாட்டிற்கு வந்தது.

கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் நகர்ப் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக தொலைதூர பஸ்கள் நகர்ப் பகுதிக்குள் வருவதில்லை. குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மேலும் இரவில் நகர் பகுதிக்குள் பஸ்கள் செல்லாததால் பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இப்பிரச்னை இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து பஸ்களும் நகர்ப் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். தொடர்ந்து இப்பிரச்னை நீடித்தால் நகர்ப் பகுதியில் வராத பஸ்களை சிறை பிடிப்போம் என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *