Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி திறந்த வெளியை நாடும் அவலம்

போடி நகராட்சி முதலாவது வார்டில் பெண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இல்லாததால் திற்த வெளியை பயன்படுத்தும் அவல நிலையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போடி நகராட்சி முதலாவது வார்டில் குரங்கணி ரோடு, சவுந்தரவேல் நகர், வலசத்துறை ரோடு, புதூர் கிழக்குதெரு, வேட்டை கருப்பசாமி கோயில் ரோடு, புதூர் மேற்குதெரு உள்ளிட்ட தெருக்களில் 900 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதூர் வலசத்துறை ரோட்டில் குடியிருக்கும் லட்சுமி, காமுத்தாய், தெய்வம், வைரமுத்து, காமுத்தாய் ஆகியோர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:

வலசத்துறை மெயின் ரோட்டில் உள்ள வீடுகளுக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடந்து செல்ல வழி இன்றி வீடுகளுக்கு முன்பே தேங்குகிறது. இதில் ஏராளமான புழுக்கள் உருவாகி வீடுகளுக்குள் ஊர்ந்து வருகிறது. மேலும் மழை காலங்களில் மழை நீருடன் சாக்கடை கலந்த வீடுகளுக்குள் புகுந்து விடும் அவல நிலை உள்ளது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சவுந்திரவேல் நகரில் மின்கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இரவில் தெருக்கள் இருளில் மூழ்குகின்றன. அருகேயுள்ள தோட்ட பகுதியில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் உலா வருவதால் இரவில் மக்கள் வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பை வாங்க பணியாளர்கள் வராததனால் வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை இரட்டை வாய்க்கால் ஆற்றோர பகுதியில் கொட்டி வருகின்றனர். இவை பெருமளவில் தேக்கியுள்ளது. மழை வரும் போது ஆற்றில் வரும் கூடுதலாக நீர் வரத்தால் குப்பை கழிவுகள் ஆற்றில் அடித்து செல்கின்றன. இதனால் ஆற்று நீர் மாசு ஏற்படுவதோடு குடியிருக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து வார்டு கவுன்சிலரிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு காணவில்லை.

பராமரிப்பு இல்லாத பெண்கள் சுகாதார வளாகம்


வலசத்துறை ரோட்டில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டடம் சேதம் அடைந்தும், முட்புதர்கள் வளர்ந்துள்ளது. எனவே, பெண்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் அருகே முன்னாள் முதல்வர் போடி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் நவீன சுகாதார வளாகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே செயல் பட்ட நிலையில் உரிய பராமரிப்பு இன்றியும், தண்ணீர் வசதி இன்றி பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதி பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாததால் ஆற்றோர பகுதியை நாடி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

சுத்தம் செய்யாத தண்ணீர் தொட்டி


வலசத்துறை ரோட்டில் 15 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

தற்போது வரை தண்ணீர் சீராக கிடைக்கிறது. இருப்பினும் பல ஆண்டுகள் ஆன நிலையில் தண்ணீர் தொட்டி பராமரிப்பு இன்றியும், சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தொட்டியில் இருந்து வரும் நீர் துர்நாற்றம் கலந்து வருகிறது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்திடவும், சுகாதார வளாகங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *