கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவி, மகளை கொலை செய்து பைனான்ஸ் ஊழியர் தற்கொலை
தேனி அருகே கடன் தொல்லையால் ஆறு மாத கர்ப்பிணி மனைவி, மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்து தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே அம்மச்சியார்புரம் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் சதீஷ்குமார் 37. இவரும் கண்டமனுார் ஆசாரியார் தெரு முதுகலை பட்டதாரியான அசிதா 32, ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அரண்மனைப்புதுார் முல்லைநகரில் மகள் பிரித்திகாவுடன் 5, வசித்து வந்தனர். நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் 4 மாதங்களாக சதீஷ்குமார் விரக்தியுடன் வேலைக்கு செல்லவில்லை.
அசிதாவின் தந்தை நாகராஜ் ஆக., 22 மாலை அலைபேசியில் மகளை அழைத்தார். பதில் இல்லை. மருமகனை தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை.
சந்தேகம் அடைந்து அருகில் வசிப்பவர்களிடம் அலைபேசியில் மகள் வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார். அவர்கள், வீடு பூட்டப்பட்டுள்ளது. காலையில் இருந்தே வீடு திறக்கப்படவில்லை,’ என்றனர்.
இதனால் நாகராஜ் அரண்மனைப்புதுார் வந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மகள், பேத்தி கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தனர். சதீஷ்குமார் மற்றொரு அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரிந்தது. நாகராஜ் பழனிச்செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், கைரேகை பிரிவு போலீசார் மூவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடிதம், டைரி, அரிவாளை கைப்பற்றி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
டி.எஸ்.பி., கூறியதாவது: மருமகனின் தேவையற்ற செயல் தான் மகள், பேத்தி கொலையானதற்கு காரணம் என நாகராஜ் புகாரில் தெரிவித்துள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் சதீஷ்குமார், ”எனக்கு வாழ பிடிக்கவில்லை.
நான் மட்டும் போய் விட்டு மனைவி குழந்தைகளை விட்டு சென்றால் கஷ்டப்படுவாங்க. அதனால் அவர்களையும் என்னுடன் அழைத்து போறேன். என் விதி முடிந்து விட்டது. தயவு செய்து என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். ஐ லவ் யு மை பேம்லி, அசிதா, பிரித்திகா,” என எழுதியுள்ளார்.
மனைவி 2022 முதல் ஆலோசனை கூறுவதை கூட டைரியில் சதீஷ்குமார் எழுதியுள்ளார்.
அதற்கு அவரும் எழுத்து மூலம் அதே டைரியில் பதிலும் அளித்துள்ளார் என்றனர்.