சொத்துப் பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது
தேவதானப்பட்டி, மார்ச் 24: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி தியேட்டர் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது குடும்பத்தினருக்கும், உறவினர் கருப்பையா(47) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதில், கருப்பையா என்பவர், மோகன் மனைவி முத்துராணியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மோகனின் அண்ணன் மாரியப்பன்(55), அந்த பகுதியில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கருப்பையா, மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.