தொழிலாளர்கள் அச்சம்: கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.
அப்பகுதியில் காட்டு மாடுகள் நூற்றுக்கணக்கில் உள்ள நிலையில், அவை ரோட்டின் ஓரங்களில் சாதாரணமாக நடமாடுகின்றன.
கடந்த 2 மாதங்களாக படையப்பா குண்டளை, அருவிக்காடு, செண்டுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ள நிலையில் ஒற்றை தந்தம் கொண்ட யானை அவ்வப்போது கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளது.
நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் தீவனத்தை தேடி வரும் ஒன்றை தந்தம் யானை கல்லார் எஸ்டேட் வரை நடமாடுவதுடன் பகல் வேளையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது.
அந்த யானை கடந்த ஒரு வாரமாக கல்லார் எஸ்டேட் பகுதியில் நடமாடுகின்றது. அப்பகுதியில் காட்டு மாடு, யானை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.