ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் தரைப்பாலம்
தேனி ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலம் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
தேனி ரயில்வே ஸ்டேஷன் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ளது. ஸ்டேஷன் வழியாக தினமும் மதுரை அதிவிரைவு பயணிகள் ரயில் மாலை 6:15 மணிக்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழனில் சென்னை அதிவிரைவு ரயில் இரவு 8:50க்கும் கடந்து செல்கின்றன. இதில் சென்னை ரயிலில் செல்ல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடுத்த உள்ள கால்வாயில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் இரு பகுதியிலும் தடுப்பு சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் ரயிலுக்கு டூவீலர்களில் வருவோர் தடுமாறி விழும் நிலை உள்ளது. அதே போல் மீறுசமூத்திர கண்மாயில் இருந்து கொட்டகுடி ஆற்றிற்கு செல்லும் கால்வாயில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புச் சுவரும் உயரம் குறைந்து காணப்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் உள்ள தரைப் பாலங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.