‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க வலியுறுத்தல்
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய தோட்டக்கலை அறிவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
புதுடில்லி தோட்டக்கலை துறை இயக்குனர் மூர்த்தி, கேரள மாநிலம் கோழிக்கோடு பனை மற்றும் வாசனை திரவியங்கள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ஹோமி செரியன், முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறந்த தோட்டக்கலை விஞ்ஞானிக்கான விருதினை கல்லுாரி முதல்வர் ராஜாங்கத்திற்கு, புது டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய்குமார் சிங் வழங்கி, கவுரவித்தார். பின் அவர் பேசியதாவது: துல்லிய பண்ணைத் திட்டத்தில் பயிர்களுக்கு ‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து தெளிப்பதன் மூலம் விவசாயிகள் பூச்சிகளை எளிதில் அழிக்கலாம். நிர்வாக செலவு குறையும். தட்பவெப்ப நிலை அறிந்து பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். என்றார். சர்வதேச கருத்தரங்கில் 15 நாடுகளில் இருந்து வேளாண், தோட்டக்கலை விஞ்ஞானிகள் 400 பேர் பங்கேற்றனர்.-