வனப்பகுதிக்கு சென்ற சிறுத்தை ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு
கம்பம் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தைவனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ட்ரோன் மூலம் கண்காணித்துவருகின்றனர்.
கம்பம் கோம்பை ரோடு தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரில் உள்ள வீதியில் ஆக., 23ல் நடமாடிய சிறுத்தை தாக்கி வனக்காவலர் ரகுராமனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அதன் இருப்பிடத்தை துல்லியமாக வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. வனக்காவலரை தாக்கியதும் உடனடியாக வந்த ஓடை வழியே சென்ற சிறுத்தை தனது இருப்பிடமான முயல்பாறை, கட்டக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என தேடுதல் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியில் புதர்களை நேற்று காலை மண் அள்ளும் இயந்திரம் மூலம் வனத்துறையினர் சுத்தப்படுத்தினர்.
மாவட்ட வன அலுவலர் கூறுகையில் ”மக்களின் அச்சத்ததை போக்க முதற்கட்டமாக சிறுத்தை வனக்காவலரை தாக்கிய இடத்தில் உள்ள புதரை ‘கிளீன்’ செய்தோம். நேற்று காலை டாக்டர் கலைவாணன் தலைமையிலான குழுவினர் சிறுத்தை வந்த பாதை முழுவதையும் ஆய்வு செய்தனர்.
வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. எனினும் வனத்துறையினர் 8 பேரை தொடர்ந்து கண்காணிக்க சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளதால் கம்பம் மக்கள் பயப்பட வேண்டாம் என்றார்.