உறுப்பினர்கள் ராஜினாமாவால் முடங்கிய ஊராட்சி நிர்வாகம்; அடிப்படை வசதிகளுக்கு தவிக்கும் கொத்தப்பட்டி பொதுமக்கள்
ஆண்டிபட்டி ஒன்றியம், கொத்தப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
ஒரே கிராமத்தைக் கொண்ட இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் கூடுதல் தேவைக்கு போர்வெல் நீரை பயன்படுத்துகின்றனர்.
தெருவிளக்குகள் எரியாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யாமல், குப்பை அகற்றப்படாமல் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. துணைத் தலைவர் பதவி இல்லாததால் ஊராட்சியில் வரவு செலவுகளை நிர்வகிக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயம் கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக கொண்டுள்ள கிராமத்திற்கு தண்ணீரின் தேவை அதிகம் உள்ளது. பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 15 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் உள்ளது.
புதிய குடிநீர் திட்டம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. கிடைக்கும் போர்வெல் நீரைக் கொண்டு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவு நீரும் புல்வெட்டி கண்மாய் அருகே உள்ள போர்வெல் குழாய் அருகில் தேங்குவதால் தண்ணீரின் தன்மை பாதிப்படைகிறது. ஊராட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பாதுகாப்பில்லாத சுகாதார வளாகம்
ஆதீஸ்வரன், கொத்தப்பட்டி: புதிதாக கட்டப்படும் பெண்கள் பொது சுகாதார வளாகத்தை ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே பாதுகாப்பில்லாத இடத்தில் கட்டுகின்றனர்.
மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. புல்வெட்டி கண்மாய் அருகே போதிய இட வசதி உள்ளது.
அப்பகுதியில் புதிய பெண்கள் சுகாதார வளாகம் கட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்வெட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தவிர்க்க ஊராட்சி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
புல்வெட்டி கண்மாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் பெரியசாமி சில மாதங்களுக்கு முன் அறிவுறுத்தினார். அதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இங்குள்ள கம்ப்யூட்டர் மையமும் செயல்படவில்லை.
ஊராட்சி செயலாளர் வருவதில்லை. பொதுமக்கள் வீட்டு வரி குடிநீர் வரி ஆகியவற்றை தனியார் பிரவுசிங் சென்டரில் செலுத்துவதால் கூடுதல் செலவாகிறது.
நிர்வாகம் முடக்கம்
கணேசன்: ஊராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் ஊராட்சியின் ஆறு உறுப்பினர்களில் துணைத் தலைவர் உள்பட 4 பேர் ராஜினாமா செய்து விட்டனர்.
இதற்கான தேர்தல் நடத்தியும் யாரும் வேட்புமனு தாக்கலுக்கு முன்வரவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் செயல்பட முடியாமல் முடங்கி கிடக்கிறது.
பொதுமக்களுக்கான அவசிய தேவை கூட நிறைவேற்றும் நடவடிக்கை இல்லை. மெயின் ரோடு அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சேதமடைந்த குடிநீர் தொட்டியில் குடிநீர் ஏற்றுவது ஆபத்து ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆபத்தான போர்வெல் பள்ளம்
ராமர்: பெரும்பாலான தெருக்களில் சிமென்ட் ரோடு வசதி இல்லை. தெருக்கள் பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெண்கள் கழிப்பறை பயன்பாடு இன்றி பூட்டியுள்ளது.
சமீபத்தில் ரூ.2 லட்சம் செலவில் பரமாரித்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்பகுதியில் ஊராட்சியின் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. குப்பை கிடங்கிற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.
இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும், அதிகாரிகள் பார்வையிட்டும் நடவடிக்கை இல்லை.
அங்கன்வாடி மையம் அருகே பயன்பாடு இல்லாத போர்வெல் குழியை கல்லால் மூடிவைத்துள்ளனர்.
குழந்தைகள் வந்து செல்லும் இடத்தில் உள்ள ஆபத்தான மின் கலப்பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும். மின் ஒயர்களும் தாழ்வாக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
செயலர் ஒத்துழைப்பு இல்லை
செல்வராணி, ஊராட்சி தலைவர்: ஊராட்சி நிர்வாகத்தில் துணைத் தலைவர் இல்லாததால் வரவு செலவு கணக்குகளை மேற்கொள்ள முடியவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி தலைவருடன் இணைந்து செக்கில் கையெழுத்திட்டு தேவையான செலவுகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர் ஒத்துழைப்பும் இல்லாததால் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.