நெற் பயிரில் புகையான் தாக்குதல் தடுக்க வேளாண் துறை ஆலோசனை
சின்னமனூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிரில் புகையான் தாக்குதல் தென்படுகிறது. இதனை தடுக்க வேளாண் உதவி இயக்குநர் பாண்டி ஆலோசனையில் கூறியிருப்பதாவது :
குச்சனூர், மார்க்கையக்கோட்டை, பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம் பகுதி நெல் பயிரில் அடிப்பகுதியில் இளம் பூச்சிகளும், முதிர்ந்த பூச்சிகளும் இருந்து கொண்டு பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.
பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி வட்ட வடிவில் காயத் தொடங்கும். தீய்ந்தது போல் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகவும், முற்றிலும் காய்ந்து காணப்படும். இதனால் பயிர்கள் சாய்ந்து விடும்.
இதை கட்டுப்படுத்த வயலில் நீரை முழுவதும் வடித்து விட வேண்டும். நெருக்கமாக நடவு செய்யும் முறையை தவிர்க்க வேண்டும்.
சூரிய ஒளி காற்றோட்டம் அடிப்பகுதியில் நன்கு படும்படி நட வேண்டும்.
தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்களை போட கூடாது. விளக்கு பொறி அமைத்து புகையான் கவர்ந்து அழிக்க வேண்டும்.
பகலில் மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை பயன்படுத்த வேண்டும். வயலில் நன்றாக நீர் வடித்த பின் மருந்து தெளிக்க வேண்டும்.
நேரடியாக மருந்தை தூரின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும் ஒரு எக்டேருக்கு பைமெட்ரோசின் 50 சதவீதம் 300 கிராம் அல்லது இமிடாக்ளோப்ரிட் 125 மில்லி அல்லது பைப்ரோனில் 1000 மில்லி அல்லது டைனோ டெபியூரான் 20 சதவீதம் 200 கிராம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் 15 லிட்டர் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து தெளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.