ரூ.98.50 லட்சம் மோசடி : நிதி நிறுவன பங்குதாரர் கைது
தேனியில் முதலீட்டாளார்களுக்கு அதிக லாபம் தருவதாக கூறி 98.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அல்லிநகரத்தை சேர்ந்த சரவணன் பாலகுமார், 29, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
தேனி வடபுதுப்பட்டி ஜெயக்கண்ணன் மனைவி பிரேமா, 37, தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன் சம்பந்தமாக தேனி சுக்குவாடன்பட்டியில் செயல்பட்டு வந்த ‘தாய் தழிழ்நாடு அக்ரோ பாப்ஸ் நிதி லிமிடெட்’ என்ற நிதிநிறுவன ஊழியரான ரத்தினம் நகர் மணிகண்டனுடன் சிலர், எங்கள் ஊருக்கு வந்தனர். தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாயை, ஓராண்டிற்கு டிபாசிட் செய்தால் முதிர்வு காலம் முடிந்தவுடன் வட்டியுடன் 1.24 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றனர்.
அதை நம்பி பல்வேறு தேதிகளில் முதலீடாக 47 லட்சம் ரூபாயும், நிறுவனத்தின் பங்குதாரராக என்னை இணைத்துக் கொள்ள பணம் கேட்டதால் 26.50 லட்சம் என மொத்தம் 73.50 லட்சம் ரூபாய் செலுத்தினேன். அந்நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி 7 பேரிடம் டிபாசிட்டாக 25 லட்சம் ரூபாய் பெற்று, அதையும் திருப்பித் தரவில்லை. மொத்தம் 98.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். நிதி நிறுவன இயக்குனர்களான சரண்யாதேவி, சரவணன் பாலகுமார், பங்குதாரர்கள் இருவர், ஊழியர்கள் மணிகண்டன், மனைவி கார்த்திகா உட்பட 8 பேர் மீது, வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரவணன் பாலகுமார் உட்பட மூன்று பேர் கைதாகி உள்ளனர்.