எல்லைகளில் ‘நிபா’ சோதனை தீவிரம்; 24 மணி நேர கண்காணிப்பை தொடர முடிவு
நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையில் உள்ள குமுளி லோயர்கேம், கம்பம் மெட்டு, போடி மெட்டு முந்தல் பகுதியில் தீவிர சோதனை செய்யும் பணியை தமிழக சுகாதாரத் துறையினர் துவக்கியுள்ளனர்.
வவ்வால் மூலம் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவற்றால் மனிதர்களுக்கும் பரவும். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என்றாலும் அருகே உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் வாகனங்களை அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
எல்லையில் உள்ள குமுளி லோயர்கேம்பில் கேரளாவில் இருந்து வரும் அனைவரையும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கின்றனர். இன்று முதல் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
கம்பமெட்டு ரோடு, போடி மெட்டு முந்தல் பகுதிக்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை நிறுத்தி டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் காய்ச்சல் உள்ளதா என பார்க்கின்றனர். காய்ச்சல் உறுதியானால் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சோதனை நடத்தும் இடங்களில் அலுவலர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.