இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றவே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தோம்: அ.தி.மு.க., உண்மையை உடைக்கிறார் அ.தி.மு.க., – மா.செ.,
‘இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றவே பா.ஜ., வுடன் கூட்டணி வைத்தோம்’ என, அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்டச்செயலர் குமரகுரு பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;
ஜெயலலிதா இறந்த சமயத்தில் துரோகிகள் கட்சியை இரண்டாகப் பிரித்தனர். அதில் ஒருவர் சென்று, ‘அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க வேண்டும்; பழனிசாமியை பதவியில் இருந்து எடுக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன்’ என, பிரதமர் மோடியிடம் கூறினார். அதையடுத்து, மத்திய அரசு தரப்பிலிருந்தும் நம் ஆட்சியை கலைப்பதற்கான வழியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதை அறிந்த பழனிசாமி, சாதுரியமாக செயல்பட்டு, ‘உங்களுக்கு நான் துணையாக இருக்கிறேன்’ எனக் கூறி, மத்திய பா.ஜ., அரசுடன் இணக்கமாக செல்வதென முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே, தங்கள் பக்கம் இருந்த பன்னீர்செல்வத்தை அழைத்த மோடி, அ.தி.மு.க.,வில் சேருங்கள்; உங்களுக்கு அமைச்சர் பொறுப்பு வாங்கிக் கொடுக்கிறோம் என்று கூறினார். அதையடுத்தே, மீண்டும் அ.தி.மு.க., பக்கம் வந்தார் பன்னீர்செல்வம். இதைத்தான் பன்னீர்செல்வமும் ஒவ்வொரு கூட்டத்திலும் கூறி வருகிறார்.
பா.ஜ.,வுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தான் பழனிசாமிக்கு இருந்தது. இருந்தாலும், 2021 தேர்தலில் கட்சியை காப்பாற்ற வேண்டும்; இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும்.
எம்.ஜி.ஆர்., மாளிகையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார். இது பழனிசாமியின் சாமர்த்தியமான நடவடிக்கை.
தேர்தல் முடிந்து அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததும், பழைய படி கட்சியை பிளக்கும் நடவடிக்கை துவங்கியது. இருந்தாலும், சட்டப் போராட்டம் நடத்தி இரட்டை இலை சின்னத்தைப் பெற்று, கட்சியையும் பெற்று, பொதுச்செயலர் ஆனார் பழனிசாமி. இனி அ.தி.மு.க.,வுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதை உச்ச நீதிமன்றம் வரை சென்று, அதற்கான உத்தரவைப் பெற்று விட்டார் பழனிசாமி.
தேர்தல் ஆணையமும், இரட்டை இலை சின்னமும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்குத்தான் என, கூறிய பிறகு, இனியும் பா.ஜ., கூட்டணியைத் தொடர்ந்தால், கட்சியை அழித்து விடுவர் என, துணிச்சலுடன் முடிவெடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறினார் பழனிசாமி.
கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணிக்காக பா.ஜ., தரப்பில் இருந்து எவ்வளவோ அழுத்தம் கொடுத்தனர். பதவி பெரிதல்ல; தன்மானம் தான் பெரிது என எண்ணி, கூட்டணியில் இருந்து வெளியேறினார் பழனிசாமி.
இவ்வாறு அவர் பேசினார்.