மதுரை சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதி முன் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வருகிறார்கள். மே 6 முதல் முக்கிய நிகழ்வாக அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து மே 8 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 10 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
திருக்கல்யாணத்திற்கு முன்பதிவு; மே 8 ல் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் maduraimeenakshi.hrce.tn.gov.in இன்று (ஏப்.,29) முதல் மே 2 இரவு 9:00 மணி வரை ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெறமுன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பதிவு செய்ய முடியாது.
மே 3க்குள் தகவல் தெரிவிப்பு; ஆதார் கார்டு, போட்டோ அடையாள சான்று, அலைபேசி, இ-மெயில் முகவரியுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மே 3க்குள் தகவல் தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் 6 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைமேலசித்திரை வீதியில் உள்ளபிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி மையத்தில் தங்களுக்கு வந்த தகவலை காண்பித்து பணம் செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு உள்ளவர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.