தேக்கடி ஏரிக்கரையில் புலி; கண்டு ரசித்த பயணிகள்
தேக்கடி ஏரிக்கரையில் உலா வந்த புலியை படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரையோரப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிப்பது ஆனந்தம்.
தினந்தோறும் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஐந்து டிரிப்புகள் செல்லும் வகையில் 8 படகுகள் இயக்கப்படுகின்றன. படகு சவாரி செய்யும் போது யானை, மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி ஆகியவை தென்படும். எப்போதாவது புலி கண்ணுக்கு தென்படும்.
நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் மனக்கவலை என்ற இடத்தில் கரையோரத்தில் புலி உலாவியதை கண்டு ரசித்தனர்.
புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரை மணி நேரம் வரை உலா வந்த புலி பின் வனப்பகுதிக்குள் சென்றது.