பயணிகள், தொழிலாளர்கள் அவதி:அடிப்படை வசதி இல்லாத மணலி பேருந்து நிலையம்
திருவொற்றியூர்: மணலி பேருந்து நிலையத்திலிருந்து 44, 44சி, 56டி, எஸ்56, 64சி, 121ஏ, 121எம், 38ஏ, 170, எஸ் 62, எஸ் 63 என 48 ஆகிய மாநகர பேருந்துகள் சென்னையின் பல்வேறு வழித்தடங்களுக்கு சென்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் நேரக் காப்பாளர், அலுவலர் என 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரை வாங்கி ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் கழிப்பிடம் இல்லாததால் ஊழியர்களும் பேருந்தில் பயணிக்க வரும் பெண்களும் சிரமப்படுகின்றனர். மேலும் 2வது ஷிப்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு அறையும் இல்லை. இதனால் நேரக் காப்பாளர் அறை மற்றும் பயணிகள் இருக்கையில் ஊழியர்கள் உறங்க வேண்டிய அவலநிலை உள்ளது.
மின் விளக்குகள் போதிய அளவுக்கு இல்லாததால் இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறு எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் மணலி பேருந்து நிலையம் இருப்பதால் ஊழியர்களும் பயணிகளும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் புதுப்பித்து கட்டமைக்க வேண்டும் என்று ஊழியர்களும் பயணிகளும் போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
* வீணடிக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
கடந்த 2019-20ம் ஆண்டு ரூ.7 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இந்த பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் அதை பயன்பாட்டுக்கு திறந்து வைக்காமல் கிடப்பில் விட்டதால் தற்போது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்படுத்தப்படாமல் பாழாகிக் கொண்டிருக்கிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
* ஆடு, மாடுகள் உலா
பேருந்து நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கேட் இல்லாததால் வெளியில் இருந்து ஆடு, மாடுகள், நாய்கள் நிலையத்திற்குள் சுற்றித் திரிவதால் குழந்தைகளுடன் வரும் பயணிகள் மாடு முட்டியும், நாய் கடிக்கு ஆளாகியும் அவதிப்படுகின்றனர்.