மரக்கன்றுகள் நட நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு”
சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சி மேகமலையின் அடிவாரத்தில் உள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகளில் பெயருக்கு கூட மரங்கள் இல்லை.
குறிப்பிட்ட சில விரிவாக்கப் பகுதிகளில் மட்டும் மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. சின்னமனுாரை மாசில்லா நிலைக்கு கொண்டு வரவும், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தன்னார்வலர்களும், பள்ளி மாணவர்களும் களம் இறங்கி உள்ளனர்.
அதற்கும் மேலாக வனத்துறையின் ஒரு அங்கமாக உள்ள வருஷநாடு மண் வள பாதுகாப்பு துறையினர் மரக்கன்றுகள் வளர்ப்பதில் குறிப்பாக சின்னமனுார் பகுதியை பசுமை பள்ளத்தாக்காக மாற்றுவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, மயிலாடும்பாறை, சின்னமனுார் ஆகிய ஊர்களில் இதற்கு என சரக அலுவலகங்கள் உள்ளன. சின்னமனுார் சரகத்தில் உள்ளவர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனையில் குறுங்காடு அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு, வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகளை, நூற்றுக் கணக்கில் நடவு செய்யப்பட்டு உள்ளன. இது தவிர இங்குள்ள கால்நடை மருந்தகம், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளுக்கும் மரக்கன்றுகளை வழங்கி உள்ளனர். இதனால் சின்னமனுார் நகரம் பசுமை போர்வைக்குள் கொண்டு வரப்படும் சூழல் உள்ளது.
பசுமைச்சூழலே இலக்கு
சந்திரசேகரன், ரேஞ்சர், மண்வளப் பாதுகாப்பு சரகம், சின்னமனுார்: சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் என்றால் தேவையான எண்ணிக்கையில் மரங்களை வளர்க்க வேண்டும். இன்றைக்கு பல தொண்டு நிறுவனங்கள், தனியார் தன்னார்வலர்கள் இந்த விஷயத்தில் களம் இறங்கி உள்ளனர் உண்மையில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மரக்கன்றுகளை நடவு செய்வதில் சுணக்கமாக உள்ளனர். ஒரு சிலர் மரக்கன்றுகளை நடவு செய்து விட்டு அதை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். இதற்காக தான் தமிழக அரசு காலநிலை மாற்றத்திற்கான தமிழக உயிர்ப் பன்மை, பாதுகாப்பு, பசுமையாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. தேனி மாவட்டத்தில் தேனி , போடி, பெரியகுளம், மயிலாடும்பாறை , சின்னமனுார் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாவட்டத்தை பசுமை போர்வைக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சின்னமனுார் அரசு மருத்துவமனை, கால்நடை மருந்தகம்,- பள்ளிகள், கல்லூரிகளுக்கு மரக்கன்றுகளை கொடுத்து நடவு செய்துள்ளோம். அரசு மருத்துவமனையில் குறுங்காடு அமைத்துள்ளோம். கல்லுாரி, பள்ளி, மருத்துவமனைகளில் நாங்களே நடவு செய்து பராமரிக்கின்றோம். பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது , நிலத்தடி நீர்மட்டம் சரிவடையாமல் காப்பது, மண் சரிவு ஏற்படுவதை தடுப்பது, குறிப்பாக சுற்றுப் புறச்சூழல் மாசுபடாமல் காப்பது குறிக்கோளாகும். தேவைப்படும் விவசாயிகள், தனி நபர்கள் என யாராக இருந்தாலும்மரக்கன்றுகள் தர உள்ளோம். சின்னமனுாரை மாசில்லா நகராக மாற்றுவதும், கம்பம் பள்ளத்தாக்கை பசுமை போர்வைக்குள் கொண்டு வருவதே எங்கள் துறையின் இலக்கு., என்றார்.
பாடல், நாடகம் மூலம் விழிப்புணர்வு
ராமசாமி, வேளாண் அலுவலர் (ஓய்வு) சின்னமனுார் : சுற்றுப்புறச் சூழல் மாசு பட மரங்கள், செடி கொடிகள் இல்லாததே காரணமாகும். கிடைக்கும் இடங்களில் மரங்களை நடவு செய்து வளர்க்க தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து வருகிறேன். வேளாண் துறை, வனத் துறையும் மரக்கன்றுகளை நடவு செய்கிறது.
இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். நாட்டுப்புற பாடல்கள், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
இதற்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளேன். இப்போதைக்கு தலைவர்களின் பிறந்த நாள், வீடுகளில் நடக்கும் விசேஷ நாட்களில் மரக்கன்றுகளை கிடைக்கும் இடங்களில் நடவு செய்து வருகிறேன்.
இது தனிப்பட்ட மனிதரின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்னை. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் களம் இறங்கினால் தான் சின்னமனூரை மாசில்லா நகராக மாற்ற முடியும். அதற்கான பணிகளை துவக்குவோம்.