கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிரமம் :துார்வாராத வேலப்பன் குளத்து ஓடை ‘
தேவாரம் : தேவாரம் அருகே எரணம்பட்டியில் உள்ள வேலப்பன் குளத்து ஓடை துார்வாராமல் உள்ளதால் செடிகள் வளர்ந்து, பிளாஸ்டிக், குப்பை மலைபோல் தேங்கி உள்ளதால் எரணங்குளம் கண்மாயில் மழைநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்யும் மழை நீரானது வேலப்பன்குளத்து ஓடை வழியாக தம்மிநாயக்கன்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பகுதிகளை கடந்து எரணம்பட்டி எரணங்குளம் கண்மாயில் கலக்கிறது. இங்கு நிரம்பும் நீரானது கோணாம்பட்டி, நாகலாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதன் மூலம் 500 ஏக்கர் அளவில் நேரடியாகவும், 300 ஏக்கர் மறை முகமாக பாசன வசதி பெறுகிறது.
மேலும் விவசாய கிணறுகளில் நீர்மட்டமும் உயர்கிறது. நீர்வரத்து ஓடையின் இருபுறம் விவசாயிகள் ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
எரணம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வேலப்பன் குளத்து ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடிகள் வளர்ந்து, பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக தேங்கி கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, அருகே குடியிருக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாத நிலை உள்ளது. சமீபத்தில் தேவாரம் பகுதியில் மழை பெய்தும் அதற்கான நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேவாரம் மலை அடிவார பகுதியில் இருந்து வேலப்பன்குளம் நீர்வரத்து ஓடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடையை துார்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.